பள்ளி வகுப்புகளில் பங்குச்சந்தைப் பாடம்?
பெரிய பெரிய ஆசை -1 : பள்ளி வகுப்புகளில் பங்குச்சந்தை பற்றிய பாடங்கள். பங்குச் சந்தை சார்ந்த நிப்டி 50 இன்டெக்ஸ் போன்றவற்றைப் பற்றி வகுப்புகள்.
பள்ளி வகுப்புப் பாடங்கள்
இன்றைய தமிழ் வகுப்புகளில் நாம் மாணவர்களுக்கு திருக்குறள், வாழ்க்கைக்கல்வி, பொதுநலம் , தொழில் மற்றும் அறம் சார்ந்த கருத்துகளையும் கற்றுக் கொடுக்கிறோம். அதில் பங்குச்சந்தை பற்றிய பாடங்களையும் இணைத்துக் கற்றுக் கொடுத்தால் எப்படி இருக்கும் ?
எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் பாடத்தில் வங்கிக் கணக்கு என்றால் என்ன? வைப்பு நிதியெனும் எப்.டி.(FD) எப்படி இயங்குகிறது ? பங்குச் சந்தை என்றால் என்ன ? அது எப்படி இயங்குகிறது ? நிப்டி 50 இன்டெக்ஸ் எப்படிச் செயல்படுகிறது ? பங்குகளை எப்படி முதலீடு செய்வது ? Mutual fund க்கு பங்குச் சந்தைக்கும் என்ன வித்தியாசம் ? போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தால் எப்படி இருக்கும்?
இதன் மூலம் பணத்தினை எப்படி நடைமுறை வாழ்வில் முதலீடு செய்ய வேண்டும் என்ற அடிப்படை புரிதல் மாணவர்களுக்கு ஏற்படும்.
நான் சிறுவயதில் படிக்கும் போதும் இது சார்ந்த விழிப்புணர்வு எனக்குக் கிடைக்கவில்லை. மேலும் மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதனை தாண்டி, அவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வினை பள்ளி கல்வியின் வாயிலாக ஏற்படுத்த வேண்டியது, நமது கடமை. இதனால், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க, பெற்றோர்களும் பங்குச் சந்தை குறித்துப் படிக்கிறார்கள். நடுத்தர மக்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இது வழிவகை செய்கிறது.
அரசாங்கத் திட்டங்களில் மொத்தமாய்க் கொடுக்கும் பணத்திற்குப் பதிலாக, உதாரணமாக கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக 900 நேரிலும், 100 ரூபாயை NIFTY 50 இன்டெக்ஸில் முதலீடு செய்வதால், நாட்டின் முதலீடு பெருகுவதோடு, பாமர மக்களும் முதலீட்டாளராக மாறுவார்கள். அவர்களும் பங்குச் சந்தை குறித்து மேலும் அறிந்து கொண்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முன்வருவர்.
பங்குச் சந்தை என்றால் என்ன?
ஒரு நிறுவனம் தனது தொழிலை மேலும் விரிவாக்கத் தேவையான பணத்தைப் பங்குச் சந்தை மூலம் பெற்றுக்கொள்கிறது. அது எப்படியெனில்… 50 லட்சம் மதிப்புள்ள ஒரு நிறுவனமானது, தனது நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்த மேலும் 50 லட்சம் தேவைப்படும் பொழுது தனது நிறுவனத்தை பங்குச்சந்தையில் நிறுவி, தனது மொத்த சொத்து மதிப்பினை பங்குகளாக மாற்றி , தேவையான 50 லட்சம் பணத்தை மக்களிடமிருந்து பங்குகள் வழியாக பெற்றுக் கொள்ளும். அந்த நிறுவனத்தின் லாபத்தைப் பொறுத்து உங்களுக்கும் லாபம் கிடைக்கும். ஒரு நிறுவனத்தின் நிதி அறிக்கை , வரவு செலவு கணக்கு போன்ற பல தகவல்களைப் புரிந்து கொண்டு, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்கையில் – நாம் எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் பெறலாம்.
Buy assets not liabilities is an investing
– Robert Kiyosaki
முதலீட்டினை சொத்துகளில் செய்யுங்கள், பொருட்களில் செய்யாதீர்கள் என்று ராபர்ட் கியோசகி தனது rich dad poor dad புத்தகத்தில் கூறுகிறார். எளிதாகக் கூறவேண்டுமெனில், நம்முடைய பணத்தை மகிழுந்து, இருசக்கர வாகனம் போன்ற பொருட்களை வாங்குவதை விட பங்குச் சந்தை,நிலம் போன்ற சொத்துகளில் முதலீடு செய்யுங்கள் என்கிறார்.
இதுபோன்ற பங்குச் சந்தை சார்ந்த கல்வி அறிவினை மாணவர்களுக்கு இளம் வயதில் தெரிவிப்பதன் மூலம், பங்குச் சந்தையின் முதலீட்டாளர்களை அதிகரிக்கலாம்.பங்குச்சந்தையின் முதலீடு அதிகரிக்கும் போது, அது சார்ந்த தொழிலும் முன்னேறும். இது நேரடியாக பணப்புழக்கத்தைப் பெரிதாக்கும். நாட்டின் பணப் புழக்கம் அதிகமாக இருந்து, பலர் முதலீடு செய்கையில் நாட்டின் ஜிடிபி வளரும்.
மற்ற நாடுகளின் பங்குச் சந்தை முதலீடு
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மக்கள் தொகையின் சதவீதம்:
அமெரிக்கா – 55%
ஆஸ்திரேலியா – 40%
இங்கிலாந்து – 33%
ஜப்பான் – 30%
கனடா – 25%
சீனா – 13%
இந்தியா – 3%
இந்தியாவில் வெறும் மூன்று சதவீத மக்கள்தான் பங்குச் சந்தை முதலீட்டாளர்களாக இருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 55 சதவீத மக்கள் அதாவது பாதிக்கும் அதிகமானோர் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.
இந்தியாவின் பி.எஸ்.இ. எனப்படும் பம்பாய் பங்குச் சந்தையில் (Bombay stock exchange) பதிவிடப்பட்டுள்ள 5,246 நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பானது அமெரிக்காவின் DJIA எனும் 30 பெரிய நிறுவனங்களின் பங்குகளின் பண மதிப்பை விட 8 மடங்கு அதிகம்.
3% ஆக இருக்கிற இந்தியா கிட்டத்தட்ட 20% ஆக அதிகரித்தாலும், நம்முடைய பொருளாதார வளர்ச்சி மேன்மேலும் அதிகரிக்கும். பங்குச் சந்தை போன்ற பணம் முதலீட்டு செயல்பாடுகளை மாணவர்களின் மனதில் கல்வி பாடங்களில் வழியாக விதைக்க வேண்டும்.அத்தகைய ஒரு கல்வியை நாம் நமது அடுத்த தலைமுறைகளுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இதையெல்லாம் புரிந்துகொள்ள உங்களுக்கு கடினமாக இருந்தால், கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை. ஆயிரம் ரூபாயை எடுத்து NIFTY 50 Index fund இல் முதலீடு செய்யுங்கள். அவை மேலும் கீழும் மாறுவதைக் கொண்டு நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதே போல மாணவர்களும் முதலீடு செய்வதன் மூலம் , அனுபவப்பூர்வமாக எளிதில் புரிந்து கொள்வார்கள்.
பார்வைக் குறிப்புகள் (References)
- https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/when-and-why-british-first-came-to-india-1591166-2019-08-24
- https://twitter.com/twinkleinvest/status/1471802570607775745
- https://dividendsdiversify.com/buy-assets-not-liabilities/#:~:text=Buy%20assets%20not%20liabilities%20is,best%2Dselling%20personal%20finance%20book.
- https://groww.in/blog/indian-vs-us-stock-market
- https://www.investopedia.com/ask/answers/033015/how-does-stock-market-affect-gross-domestic-product-gdp.asp#:~:text=The%20stock%20market%20is%20often%20a%20sentiment%20indicator%20that%20can,more%20spending%20and%20higher%20GDP.
Leave a Reply