234 உலகத்தர நூலகங்கள்

பெரிய பெரிய ஆசை – 1


தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு பெரிய நூலகம். தமிழ்நாடானது 38 மாவட்டங்களையும் 234 சட்டமன்ற தொகுதிகளையும் கொண்டுள்ளது. மேலும் 4600 க்கும் மேற்பட்ட அரசாங்க நூலகங்களை உள்ளடக்கிய மாநிலமாகும்.

இந்தியாவின் முதல் 10

இந்தியா டுடே செய்தியறிக்கைப் படி, (India Today article ) இந்தியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய பெரிய 10 நூலகத்தில், நம் தமிழ்நாட்டின் மூன்று நூலகங்கள் இடம் பெற்றுள்ளது.
1.சரசுவதி நூலகம், தஞ்சாவூர்
2.அண்ணா நூற்றாண்டு நூலகம் , சென்னை
3.கன்னிமாரா நூலகம் ,சென்னை

அண்ணா நூற்றாண்டு நூலகம் போல் ஒவ்வொரு தொகுதிக்கும் அல்லது ஒரு மாவட்டத்திற்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும்.அண்ணா நூற்றாண்டு நூலகமானது 5 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களைக் கொண்டுள்ள குளிர்சாதன வசதியுடைய நூலகம் ஆகும். இங்குப் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் நிறைய மாணவர்கள், இந்த நூலகத்திற்காகவே இதன் அருகில் தங்கிப் படிக்கின்றனர்.அது போன்றதொரு நூலகத்தினை ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ஒன்று அமைக்கும் போது, போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் மாணவர்களுக்குப் பெரும் உதவியாக அமையும். அது மட்டுமல்லாமல், அத்தொகுதியைச் சுற்றியுள்ள பெரியோர்கள், பெண்மணிகள், குழந்தைகள், மாணவர்கள் என அனைவரும் பயனுள்ள வகையில் நேரம் செலவழிக்கச் சிறந்த இடமாக அமையும்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான தனிப்பிரிவு உள்ளது.அதில் குழந்தைகள் மனம் கவரும் வகையில் அந்த அறையின் வடிவமைப்பு பொம்மைகளுடன், அழகாய் அமைக்கப்பட்டிருக்கும். அது போன்று கிராமப்புற நூலகத்திலும், குழந்தைகள் பிரிவு, தனது சொந்த நூல்களைப் படிக்கும் பிரிவு, போட்டித் தேர்வு பிரிவு என முறையான பெரிய நூல்நிலையங்களை ஏற்படுத்த வேண்டும்.

நூலக விழிப்புணர்வு

தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட நூல் நிலையங்கள் அதிகம்.12,000 க்கும் மேற்பட்ட நிலையான நூலகங்களைக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 2016ல் பல்துறைக்கான சர்வதேச கல்வி ஆராய்ச்சி இதழ் (JOURNAL OF INTERNATIONAL ACADEMIC RESEARCH FOR MULTIDISCIPLINARY) ஆய்வின் படி தமிழ்நாடு ஆனது ஆறாம் இடத்தில் உள்ளது. தற்பொழுது தமிழகத்தில் 6000த்திற்க்கும் மேற்பட்ட நூலகங்கள் உள்ளன.
அரசாங்கம் ஒரு தனிச் செயலியை உருவாக்கி அதன் மூலம் ஒவ்வொரு நூலகத்திலும் உள்ள புத்தகங்களின் இருப்பு மற்றும் நூலகங்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளுமாறு ஏற்படுத்தினால், நூலகம் செல்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.இதன் மூலம் மக்களுக்கு நூலகத்தைப் பற்றிய விழிப்புணர்வு உண்டாகும். இன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் , நுழைவுத் தேர்வுகளுக்கும் போட்டி தேர்வுகளுக்கும் தனியார் நிறுவனங்களில் பல லட்சங்கள் கொடுத்துப் படிக்கின்றனர். ஆனால், இன்றைய நூலகங்களில் NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கும் UPSC, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்களை கொடுப்பதன் மூலம் மாணவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
1,42,286 மாணவர்கள் தமிழகத்திலிருந்து 2022 ஆம் ஆண்டு நீட் தேர்வினை எழுதினார்கள். ஏறக்குறைய 15 லட்சம் மாணவர்கள் 2022 ஆம் ஆண்டு TNPSC group 4 தேர்வை எழுதினார்கள். இதிலிருந்து நூல் நிலையங்கள், போட்டி தேர்வாளர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் NET,SLET,JEE ,GATE, CUCET, SSB, NDA,ISRO இன்னும் எத்தனையோ போட்டித் தேர்வுகளும் நுழைவுத் தேர்வுகளும் உள்ளன. அதற்குத் தேவையான புத்தகங்களும் நூலகத்தில் இடம் பெற வேண்டும்.


இலவச அருகலை / Free wifi

இலவச அருகலை (wifi ) போன்ற திட்டங்களை நூலகத்தில் அறிமுகப்படுத்தும்போது, மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடங்களை இணையத்தின் வழியாக அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அந்த அருகலை – wifi மூலமாக பயன்படுத்துபவர்களுக்கு நிறைய E resources access எனும் மின் – உரிமம் வழங்கலாம். நமது நூலகமானது உலகத் தர வசதிகளுடன் கூடிய வகையில் அமைதல் வேண்டும். உலகத்தரம் என்பது வெறும் புத்தகத்தின் எண்ணிக்கையிலும் கட்டிட அமைப்பில் மட்டுமல்லாமல், எளிதில் சென்று வரக்கூடிய அளவில் , பயன்பாட்டிற்கு உகந்த வகையில் நிறைய பயன்பாட்டுத் திட்டங்களுடன் அமைந்திருக்க வேண்டும்.
நான் சமீபத்தில் கன்னிமாரா நூலகத்திற்கு சென்று வந்தேன். அங்கு மாணவர்கள் இன்முகத்தோடு புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தது, மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்தியாவில் சிறந்த நூலகங்களில் ஒன்றான கன்னிமாரா நூலகம் கூட, உலகத்தர அளவில் இல்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அங்கு இணையதளத்தை உபயோகிக்க முயன்றேன்; ஆனால் இலவச இணையதள சேவை இல்லாத காரணத்தால், பணம் செலுத்தி ஒரு கணினியில் இணையதளத்தைப் பயன்படுத்தினேன். எனினும், அதன் வேகம் நான் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகவே இருந்தது.

234 நூலகங்கள்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ,ஆஸ்டினிற்கு (Austin ) அருகில் ரவுண்டு ராக் ( Round Rock ) நகரில், ஏற்கனவே ஒரு சிறிய நூலகம் உள்ளது. அங்கு தேவையான புத்தகங்களும் கிடைத்தாலும் அதன் அருகிலேயே அண்ணா நூற்றாண்டு நூலகத்தை போன்ற ஒரு பெரிய நூலகத்தை அமைக்கின்றனர். அதேபோல தமிழகத்தில் உள்ள 4600 நூலகங்களில் சிறந்த 234 நூலகத்தைத் தேர்ந்தெடுத்து அதனை உலகத்தர அளவில் , அண்ணா நூற்றாண்டு நூலகத்தை போல் ஏன் அமைத்து தரக்கூடாது ?
சென்னை அண்ணா நகரில் வசிக்கும் நான் , ஒரு சிறந்த நூலகத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு செல்ல வேண்டும் அல்லது கன்னிமாரா நூலகத்திற்கு செல்ல வேண்டும். இப்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலில் அங்குச் சென்று வருவது என்பது மிகவும் கடினமானவும் களைப்பாகவும் அமையும். ஆனால், அண்ணா நகரிலேயே அண்ணா நூற்றாண்டு நூலகத்தை போல ஒரு உலகத்தரம் வாய்ந்த நூலகம் இருந்தால் எப்படி இருக்கும் ?
நமது இருப்பிடத்திற்கு மிக அருகாமிலேயே சிறந்த நூலகங்களை அமைத்து தரும்போது பெருமளவு பெரியோர்களும் குழந்தைகளும் இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்வர்.
Readers are leaders – வாசிப்பவர்களே தலைவர்கள்
வெளிநாட்டுகளில் வசிக்கும் மாணவர்கள் , குறிப்பாக நமது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகள் ஒரே சமயங்களில் 30 புத்தகங்களைக் கையில் எடுத்துக்கொண்டு இன்முகத்தோடு நடந்து வருவதனை பார்க்கும் பொழுது மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகிறது. அதுபோல நமது தமிழக மாணவர்களையும் காண வேண்டும்.

மின்னணுப் புத்தகம்

அமெரிக்காவில் நமக்குத் தேவையான புத்தகம் நூலகத்தில் இல்லையெனில் அதனை அருகில் உள்ள நூலகத்திலிருந்து வரவழைத்து நமக்கு அலைபேசியில் குறுஞ்செய்தி எனப்படும் message மூலம் தகவல் தெரிவிப்பர். பிறகு, நாம் அங்கு சென்று சேகரித்துக் கொள்ளலாம். மேலும் புத்தகம் இல்லாத பொழுது அதனுடைய E-book எனும் மின்னணு புத்தகத்தை, நாம் அந்த நூலகத்திலேயே இணையதளத்தின் வழியே படித்துக் கொள்ளலாம். இதனைப் போன்ற சிறந்த ஒரு உலகத் தர வசதிகளுடன் கூடிய நூலகத்தை தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் அமைத்து தர வேண்டும்.

நூலக அடையாள அட்டை / Library ID card

பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நூலகத்திற்கான அழகான ஒரு அடையாள அட்டையை வழங்கும்போது அதாவது Printed Library I’d card வழங்கும்பொழுது, உளவியல் ரீதியாக அது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும். இது அவர்களை மென்மேலும் நூலகம் சென்று வர ஊக்குவிக்கும். இத்தகைய சிறந்த நூலக அடையாள அட்டையை அரசாங்கம் மட்டுமே அடித்து தர வேண்டும் என அவசியம் இல்லை. அரசு-தனியார் கூட்டாண்மை (Private public partnership) மூலம் எளிதாகச் செயல்படுத்தலாம்.
இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நூலகமும் ஒரு கருத்தைப் பரிமாறும் இடமாக மாற வேண்டும். அதேசமயம் நூலகத்தைப் பற்றியும் அதன் அமைவிடத்தைப் பற்றியும் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.புரட்சி செய்யும் புத்தகங்களையும் புத்தகச் சாலையையும் நோக்கிப் புரப்படுவோம் !

கருத்துகளைக் காணொளியாகக் காண…

பார்வைக் குறிப்புகள் (References)

  1. https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/libraries-of-india-330775-2016-07-22
  2. https://tnfusa.org/libraries-are-temples-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/
  3. https://www.researchgate.net/publication/326461065_THE_PRESENT_SCENARIO_OF_PUBLIC_LIBRARIES_IN_INDIA_CHALLENGES_AND_OPPORTUNITIES
  4. https://luxatic.com/the-top-10-most-amazing-libraries-in-the-world/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *