1967-69 ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில், அரசு பேருந்துகளில் திருக்குறளைப் பதிக்க உத்திரவிட்டார். 1968 ஆம் ஆண்டு, அன்று போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி நடைமுறைப்படுத்தினார். இது திருக்குறளை, நம் தமிழகமெங்கும் கொண்டு சென்றது.
சிறு வயதில், என் அப்பாவுடன் வண்டியில் செல்லும்போது, சாலைகளின் இருபுறம் உள்ள தமிழ் வாசகங்களைப் படி என்று கூறுவார். இதனால் எனக்கும், என் தம்பிக்கும் தமிழ் வாசிப்பது எளிதானது என்று கூடச் சொல்லலாம். அதுபோல் என் பிள்ளைகளைத் தமிழ் வாசிக்கச் சொல்வது எளிதாக இல்லை.
நம் சாலைகளில் தமிழைக் காண்பது அரிதாகி வருகிறது. இன்று, தமிழகத்தில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்தப் பேருந்துகளில் உள்ள விளம்பரங்களில் சில (பல) தமிழை ஆங்கிலத்தில் எழுதி வருகின்றன. இதை அனுமதிப்பது தவறு. நம் தமிழக அரசு பேருந்துகளில், தமிழில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதை முறையாகச் செயல்படுத்தும்போது, பல நிறுவனங்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முன்வரும். 19/11/2023 ஞாயிறு கடிதத்திலும் அரசு பேருந்துகளில் தமிழ் குறித்து எழுதியிருக்கிறேன்.
தமிழ் சார்ந்த பொருளாதாரம் வளர இவை வழிவகுக்கும்.
நன்றி