நம் தாய்மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் நன்கு தெரியும் என்பது நமக்கு ஒரு பெரும் பலம். தற்போது உள்ள வாழ்க்கை, கல்வி முறையில், நகரங்களில் உள்ள பள்ளிகளில் என்ன தான் இரண்டாவது மொழி என்று நம் தாய்மொழியை, அல்லது வேறொரு மொழியைக் கற்றாலும், பல மாணவர்களால் அவர்களின் தாய்மொழியை இயல்பாக எழுதவும் படிக்கவும் முடிவதில்லை என்பது நிதர்சன உண்மை.
சென்ற வாரம், சில மாணவர்களைச் சந்தித்து, தமிழ் எழுத்து விளையாட்டு ஒன்று விளையாடினோம். ‘தாத்தா’ என்று எழுத வேண்டும். ‘தாதா’ என்று அந்த மாணவர் எழுதியிருந்தார். ‘த்’ தைக் காணவில்லை. இத்தனைக்கும் அவர் தமிழ் நன்றாகப் பேசும் மாணவர். இன்னொரு மாணவி, தமிழ் எழுதி, படிக்க வேண்டும் என்பது ஆசை தான். ஆனால் தமிழ் புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதில் உடன்பாடு இல்லை என்றார்.
இன்றைய சூழலில், பல பெற்றோர்களுக்கு இரண்டாவது மொழி, நம் தாய்மொழியை, பிள்ளைகளிடம் நன்றாகப் படியுங்கள் இது பெரிதும் பயன்படும் என்று புரிய வைப்பது பெரும் சவாலாகவே உள்ளது. நம் மொழிப் பாடங்கள், தமிழ் மொழி, நாம் வாழும் சமூகத்தோடு, தொழிலோடு ஒன்றி இல்லாதது இதற்கு ஒரு பெரும் காரணம்.
இதுவும் கடந்து போகும்!
இதுவும் மாறும்- மாற்றுவோம்.
நன்றி.