பள்ளியில் படிக்கும்போது, நான் விளையாட்டுகளில் பதக்கம் என்று எதுவும் வாங்கியது கிடையாது. எப்படியாவது ஒரு பதக்கமாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பள்ளியில் நடக்கும் விளையாட்டுத தினத்தில் 1600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தேன்.
எங்கள் தந்தை எனக்கும், என் தம்பிக்கும் தனி பயிற்சியாளர் எல்லாம் ஏற்பாடு செய்தார்.
ஒரு சிறந்த பயிற்சியாளரிடம் தினமும் காலையில் சில மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டோம். போட்டி நாளன்று நாங்கள் ஓடுவதைப் பார்க்க எங்கள் தந்தையும் வந்திருந்தார். 1600 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆரம்பித்தது. இவன் எல்லாம் எங்குப் பதக்கம் வெல்லப் போகிறான் என்று தான் சில நண்பர்கள் நினைத்தனர்.
நம்பிக்கையோடு ஓடினேன். 1600 மீட்டர் என்பதால், சிறிது நேரத்தில் சில நண்பர்கள் முடியவில்லை என்று வெளியேறினர். நாங்கள் இருவரும் இறுதி வரை ஓடினோம். பதக்கம் வெல்லவில்லை. ஆனால் பந்தயத்தை முடிந்து ஓட்டத்தை நிறைவு செய்தோம்.
எங்கள் தந்தை, கடிந்து கொள்ளவில்லை. இன்னும் நிறைய பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி ஊக்கம் தான் தந்தார். அப்போது அந்த அளவு எனக்குப் புரியவில்லை. இவ்வளவு பயிற்சி செய்தும் பதக்கம் கிடைக்கவில்லையே என்ற எண்ணம் தான் இருந்தது.
ஆனால், இன்று, சில மாதங்கள் பயின்று விட்டு. வெற்றியை எதிர்பார்த்தால் அது கிட்டாது என்பது தெளிவாகப் புரிகிறது. பெரு வெற்றிக்கு அதிக உழைப்புத் தேவை. எதுவும் எளிதில் கிடைப்பதில்லை
நன்றி.