நம் தமிழ்நாடு முதல்வர் 2036ம் ஆண்டிற்குள் 1·5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அண்மையில் கூறினார். நம் பிரதமர் 2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று கூறுகிறார்.
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் கண்டுபிடிப்புகள் பல இன்று அமெரிக்காவிலும், சீனாவிலும் தான் உருவாகின்றன. இதற்கு, அவர்கள் ஆராய்ச்சியில் செய்யும் முதலீடுகள் மற்றும் தயாரிக்கும் மின்சாரம் பெரிதும் உதவுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு நம் தேவை என்ன என்று பார்க்காமல் அடுத்த 10, 20 அல்லது 30 வருடங்களில் நம் தேவைகள் எப்படி இருக்கும் என்பதை கணக்கிட்டு அதுபோல் செயல்படுகின்றனர்.
நம் தமிழ்நாட்டில் குறுகிய காலத்திற்கு ஒரு யூனிட் மின்சாரத்தை முப்பது ரூபாய்க்கு மேல் வாங்கும் நிலையில் இன்று நாம் உள்ளோம். இதற்கு நாம் கட்டும் வரிப்பணம் பயன்படுகிறது.
சீனா, நம் இந்தியாவை ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அமெரிக்காவை விட 2·3 மடங்கு அதிக மின்சாரம் உற்பத்தி செய்கிறது. செயற்கை நுண்ணறிவை சிறப்பாக செயல்பட செய்யும் தரவு மையங்களுக்குத் தேவை மின்சாரம் தான். மின் உற்பத்தியும், தரவு மையங்களின் வளர்ச்சியும், சுற்றுச்சூழலையும், மக்களின் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் பாதிக்காத வகையில் திட்டமிடப்பட வேண்டும்.
தரவு மையங்களை விடுங்கள். கடந்த சில மாதங்களாக நான் வசிக்கும் பகுதியில் மின்வெட்டு ஒரு தினசரி நிகழ்வாக உள்ளது. இப்படி இருந்தால் நாம் எப்படி 1·5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவது?
தினமும் இதுபோன்ற அன்றாட நெருக்கடிகள் இருந்தால் வளர்ச்சி எப்படி வரும்? தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்துச் செயல்படுவோம்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்