‘மனத்துக்கு மனம்’ என்ற தமிழண்ணலின் வாழ்க்கைக் குறிப்பு நூலை வாசித்தேன். இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்). அவரைப் பார்த்ததில்லை, பழகியதில்லை என்றாலும், அவருடன் உரையாடிய உணர்வை ‘மனத்துக்கு மனம்’ நூல் ஏற்படுத்தியது. எளிய நூல், ஆனால் மிகவும் பயனுள்ள நூலாக இதனைக் கருதுகிறேன். ‘
மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார். முழு மூச்சாகத் தமிழை நம்பினேன். தமிழைப் படித்தேன். அதில் மூழ்கினேன்…
பிறர் பலர் அரைக்கிணற்றைத் தாண்டுவது போல் தமிழை அரைகுறையாகவே நம்பினர்.
தமிழண்ணல் எழுதியது இக்காலத்திற்கும் மிகவும் நன்றாகப் பொருந்துகிறது. தமிழ் வழிக் கல்விக்காக போராட்டங்கள் நடத்தியவர். கட்டுரைகள் பல எழுதியவர். மேலும் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக்குவது ஒரு பெரு முயற்சியாக உள்ளது என்று பல வருடங்களுக்கு முன்னரே எழுதியுள்ளார். இன்று நிலை மிகவும் மோசம் என்பது நாம் அனைவரும் வருத்தப்பட வேண்டிய ஒன்று. இந்த நிலை மாற ஒரு பண்பாட்டுப் புரட்சி வேண்டும் என்கிறார் தமிழண்ணல்.
தமிழண்ணலுக்கும் முடியரசனுக்கும் ஆன தொடர்பு, கல்வித் தந்தை தியாகராசரை சந்தித்தது, மாணவர் நகலகம் நா. அருணாசலனார் ஆற்றிய தமிழ்ப் பணிகள் என்று சுவாரசியமான ஏராளமான தகவல்கள். அவர் மகன் மணிவண்ணன் அமெரிக்கா சென்றதும், ‘அப்பா இனி நமக்குப் பணக் கவலை வராது என்றான். ஒவ்வொரு நாளும் நாங்கள் பட்ட மனக்கவலையை அறிந்தவன் அவன்’ என்று அழகாக எழுதுகிறார் தமிழண்ணல்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்