தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் குறித்து, “19/4/2026 அன்று வாக்களிப்போம்” என்ற தலைப்பிலும், “5/4/2026 அன்று தேர்தல் நகைச்சுவை” என்ற தலைப்பிலும் கடிதம் எழுதினேன்.
மே – 4 அன்று வெளியான தேர்தல் முடிவுகளுக்குப் பின், இன்று அதை வாசிக்கையில் ஒருவித மகிழ்ச்சி ஏற்படுகிறது.
எத்தனை யூடியூப் விளம்பரங்கள்… யார் பணம்?
ஒவ்வொரு வேட்பாளரும் 40 லட்சம்தான் செலவு செய்கிறார்களா? போன்ற கேள்விகளை நீங்கள் என் முந்தைய கடிதத்தில் காணலாம்.
ஆனால், 40 லட்சத்திற்கும் குறைவாகச் செலவு செய்து வெற்றி பெற முடியும் அதுபோல் வென்ற பலரை இன்று பார்க்க முடிகிறது.
இந்தத் தேர்தலில் இருந்து அரசியலுக்கு மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்விற்குத் தேவையான பாடங்களையும் கற்கலாம்.
நாம் எவ்வளவுதான் பணம் செலவு செய்தாலும், நினைத்தது நடக்கும் என்று கூற முடியாது. மக்களை சாதாரணமாக நினைக்கக் கூடாது. செய்தி ஊடகங்கள் என்னதான் “கதைகள்” சொன்னாலும், கள நிலவரம் வேறாக இருக்கும்.
சரி… முடிவுகள் வந்துவிட்டன. புதிய அரசு பொறுப்பேற்க வேண்டியது தானே?
ஏன் இவ்வளவு தாமதம்? ஆளுநர் ஏன் இப்படிச் செய்கிறார்?
இதுவே மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் முந்தைய காலங்களில் செயல்பாடு வேறு விதமாக நடந்ததே?
அந்த மாநிலங்களில் தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க அந்த மாநில ஆளுநர்கள் அழைத்தார்களே?
ஏன் தமிழகத்திற்கு மட்டும் இந்த நிலை?
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எதிர் கட்சிகளின் வளர்ச்சி அவசியமானது.
நாமே எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்… எல்லா மாநிலத்திலும் நாமே இருக்க வேண்டும்
என்றால் எப்படி?
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை. என்று பேரறிஞர் அண்ணா அன்றே சொன்னார்.
நம் இந்திய நாட்டில், நாம் ஆராய்ச்சியிலும், தொழிலிலும், ஏற்றுமதியிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நம் கவனம் இது போன்ற நாடகங்களில் இருந்தால்.
மாணவர்கள் நம்மிடம் இருந்து என்ன கற்றுக் கொள்வார்கள்?
“குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை (Minimum Government, Maximum Governance)” என்று சொல்லித் தான் நம் பிரதமர் வாக்குக் கேட்டார். ஆனால் அது நடைமுறையில் இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
இக்கடிதத்தை நீங்கள் வாசிக்கும் போது, ஒருவேளை தமிழக ஆளுநர் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்திருந்தாலும் இந்த நாடகம் தேவையற்ற ஒன்று.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும், தோல்வியுற்றோருக்கும், வாக்களித்த நம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்