கணிதமும், அறிவியலும் மிக அவசியம். நாம் இதை நன்கு உணர்ந்து உள்ளோம். ஆனால், இது மட்டுமே நம்மை செம்மைப்படுத்தாது.
நம் தாய்மொழி, தமிழ் நம்மை நல்வழிப்படுத்தும்.
வசதி படைத்த தமிழ்க் குடும்பங்கள் பல, இன்று தமிழுக்குப் பதில் ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர். காலமும், பணியும், வசிக்கும் இடமும் என இதற்குப் பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஏன், நம் சென்னையில் கூட பிள்ளைகள் அவர்கள் தாய்மொழியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகக் கருதுகின்றனர்.
என்ன வேடிக்கை…
உங்கள் வீடுகளில் உங்கள் தாய்மொழிக்குப் பதில் ஆங்கிலத்தில் பேசிப் பாருங்கள். இதன் பின் விளைவுகளை சில வீடுகளில், சில வருடங்களிலேயே பார்க்க இயலும். இன்னும் சில வீடுகளில், நாம் செய்த பிழை 10-20 வருடங்களில் தெரியும். பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் அவரவர் வேர்களை விட்டுத் தள்ளித் தள்ளிச் செல்வர். தாய்மொழியால் ஒரு பயனும் இல்லை என்று நீங்கள் நினைத்தால்… அது உங்கள் விருப்பம்.
எரிகிறது… சுடும் என்கிறோம்… தொட்டுப் பார்த்து நான் தெரிந்து கொள்வேன் என்றால்… என்ன செய்ய?
நீங்கள் ஞாயிறு கடிதத்தைப் பின் தொடர்பவராக இருந்தால்… உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் தாய்மொழி தமிழில் எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொடுங்கள். வீட்டில் தமிழ் பேசுங்கள். இன்னும் 20 வருடங்கள் கழித்து தாய்மொழி கற்காத பிள்ளையையும், உங்கள் பிள்ளையையும் உற்று நோக்குங்கள் . இதன் பயனை நீங்கள் உணர்வீர்கள். இல்லை என்றால் என்னை கண்டுபிடித்து திட்டுங்கள். அடுத்த நான்கு வாரங்களுக்கு தமிழ் குறித்து எழுதுகிறேன்.
தமிழ் வளர்ப்போம்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்