என் ஐயா அரு. பெரியண்ணன், ஆயா மீனாட்சி (அம்மாவின் பெற்றோர்) பற்றிச் சில செய்திகளைத் தெரிந்து கொள்ள, ஐயாவின் பங்காளி (உறவினர்), 90 வயது நிரம்பிய ஆத்தங்குடியைச் சேர்ந்த கருப்பையா அண்ணன் அவர்களையும், அவர் மனைவியையும் சென்னை அம்பத்தூரில் சென்ற வாரம் சந்தித்தேன்.
இருவரும் என்னை இன்முகத்தோடு வரவேற்று, குடிக்க குளிர்பானம் மற்றும் பல தந்து உபசரித்தனர். சுமார் 1 1/2 மணி நேரம் அவர்கள் இல்லத்திலிருந்து அரு. பெரியண்ணன் ஐயாவைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டேன். பல அரியத் தகவல்களைச் சொன்னார்கள். குறிப்பு எடுத்துக் கொண்டேன்.
எங்கள் ஐயா பெரியண்ணன் மறைந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்று அவர்கள் இருந்திருந்தால் அவர்களுக்கு இது நூற்றாண்டு. சத்தம் இல்லாமல் பல சாதனைகள் செய்த பெரியண்ணன் ஐயாவைப் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் விடைபெற்றேன்.
அப்போது நான் கருப்பையா அண்ணனிடம், தங்களின் நேரத்திற்கும், தகவல்களுக்கும் மிக்க நன்றி என்று கூறியபோது, அவர்கள் அதனால் என்ன? நான் வீட்டில் சும்மா தான் இருக்கிறேன். பெரியண்ணனைப் பற்றி இன்று உரையாடியது, இது ஒரு நல்லப் பொழுதாக அமைந்தது என்றார். 90 வயதுக்கு மேல் நாம் இருந்தால், நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள, எனக்கும் இது ஒரு நல்லப்பொழுதாக அமைந்தது.
நன்றி.