ஒருமுறை நான் எழுதிய ஞாயிறு கடிதம் ஒன்றினை நண்பர் ஒருவருக்கு தொடர் புடையதாக இருக்கும் என்று எண்ணி அவருக்கு வாசித்துக் காண்பித்தேன்.
கடிதம் ஒரு பக்கம் தான். வாசிக்க ஒரு நிமிடம் தான். ஆனால் நான் வாசித்த அந்த ஒரு நிமிடத்தில் நண்பரக்கு அலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இடைவேளை விட்டு மீண்டும் தொடர்ந்தேன். மீண்டும் ஒரு தடங்கல். சரி வாசிப்பதை இதோடு நிறுத்தி விடுவோம் என்று நிறுத்தி விட்டேன்.
இந்த நிகழ்வினை எண்ணிப் பார்க்கையில் ஒருவித புன்னகை என்னுள் வருகிறது. என்னைப் பொறுத்தமட்டில் அது நல்ல கடிதம் தான். பிடித்து ரசித்துத் தான் எழுதினேன். ஆனால் இன்னொருவர் அதை ரசிக்கவில்லை என்றால் அதற்கு நாம் வருத்தப்பட வேண்டியதில்லை.
நம் எழுத்தோ, படைப்போ, பொருளோ சரியான பார்வையாளர்களை வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டும். இதை இலக்குக் குழு ஆங்கிலத்தில் Target Audience என்று கூறுவோம்.
இந்த உதாரணத்தில் என்னுடைய “இலக்குக் குழு” சரியாக அமையவில்லை. அதனால் அவர்கள் ரசிக்கவில்லை. ஒரு திரைப்படத்திற்கும், தொழில், விற்கும் பொருள் மற்றும் அனைத்திற்கும் “இலக்குக் குழு” அவசியம். அதைச் சரியாக வரையறை செய்து கொண்டு செயல்பட்டால் ரசிப்பவர்களின் எண்ணிக்கையும், நம்மிடமிருந்து பொருள் வாங்குவோரின் எண்ணிக்கையும் கூடும்
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்