ஒரு அரசு நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் ஞானவேல் அரசு திட்டங்களுக்கு சூட்டப்படும் பெயர்களைப் பற்றி அழகாக விளக்கினார். இது போன்ற பெயர்களுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். கட்டணமில்லா பயணம் என்பதற்கும் இலவச பயணம் என்பதற்கும் வேறுபாடு உள்ளது.
அதுபோல் நாம் சென்னை சாலைகளில் அன்றாடம் பயணிக்கும் போது எதைப் பார்க்கிறோம், அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதிலும் மாற்றங்கள் தேவை. அண்மையில் சென்னை அண்ணாநகரில் உள்ள சிறுவர் பூங்காவில் சென்னை மாநகராட்சியின் அடையாளக் குறியீடு ஒன்றினைப் பார்த்தேன். சிங்கார CHENNAI 2.0 என்று எழுதியிருந்தார்கள்.
சென்னை மாநகராட்சியே அதன் பெயர்ப் பலகைகளில் தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து குளறுபடி செய்து எழுதினால் சாதாரண நிறுவனங்கள் எப்படி சாலைகளில் பெயர்ப் பலகை விதிகளைப் பின்பற்றுவர்? நம்ம சென்னை என்பதை ஏன்? நம்ம CHENNAI என்று எழுத வேண்டும்? சிங்கார CHENNAI என்று எழுதி ஏன் சென்னையின் சிங்காரத்தைக் கெடுக்க வேண்டும்?
நம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துங்கள். தமிழை சந்தைப்படுத்துங்கள்.
நன்றி…
கார்த்திக் சிதம்பரம்.