தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் (T.N.P.S.C)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் (T.N.P.S.C)

நாம் பள்ளியில் தேர்வு எழுதும்போது, தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருப்போம்.

18.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய டி என் பி எஸ் சி – குரூப் – 4 தேர்வு, சென்ற வருடம் ஜூலை மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் தேர்வு முடிவுகள் எட்டு மாதங்கள் கழித்து மார்ச் 24-ல் தான் அறிவிக்கப்பட்டன. முடிவுகள் அறிவிக்கப்பட்டும் குரூப்-4 காலி பணி இடங்கள் நிரப்பப்படவில்லை.

குரூப் – 4 தேர்வுகள் OMR மூலம் மட்டுமே திருத்தப்பட வேண்டும். 2023 ம் வருடம் 20,36,316 மாணவர்கள் எழுதிய நீட் தேர்வை ஒரு மாதத்திற்குள் OMR மூலம் திருத்த முடியும் போது ‘டி.என்.பி.எஸ்.சி’க்கு மட்டும் ஏன் எட்டு மாதங்கள் தேவைப்படுகிறது? 2019ல் நடைபெற்ற இதே குரூப்-4 தேர்வுக்கு முடிவுகள் வெளிவர ஒரு மாதம் மட்டுமே தேவைப்பட்டது.

இதேபோல் குரூப்-2 தேர்வுக்கான விண்ணப்பம் சென்ற ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி வெளியிடப்பட்டு, ஒரு வருடம் கழித்துப் பிப்ரவரி 2023 ல் தான் முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. ஆனால் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதன்பின் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்று, முடிவுகள் வெளிவந்து அதன் பின் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இதுபோன்று காலம் தாழ்த்தினால் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

யுபிஎஸ்சி (UPSC) குடிமைப்பணியியல் (Civil Services) தேர்வுகள் போல டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளும் அட்டவணைப்படி நடத்தப்பட்டு பணியிடங்கள் வருடம் தோறும் நிரப்பப்படவேண்டும்.

ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும்போது, கேட்கும் கேள்விகள், நம்மை நடத்தும் விதம், நேர்காணல், எவ்வளவு விரைவாக முடிவைச் சொல்கிறார்கள் போன்றவற்றை வைத்து அந்த நிறுவனத்தை மதிப்பீடு செய்யலாம்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகளை வெளியிட்டு பணி இடங்களை உடனே நிரப்பினால் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருடம் தோறும் அட்டவணை (schedule) பின்பற்றி திறமையான மாணவர்களை தேர்வு செய்து, பணியிடங்களை நிரப்பி, மிகச் சிறந்த வேலை கலாச்சாரத்தை (WORK CULTURE) உருவாக்கினால் தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே சிறந்த அரசுப் பணி இடமாக மாறும்.

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top