ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் மழை பெய்யும் போது தமிழகச் சாலைகளில் நீர் தேங்குவது ஏன்? நகரத்தில் மழை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது, சாலைகளில் நீர்த் தேக்கமும், அதனால் ஏற்படும் பெரும் அவதியும் தான். இந்த நிலைக்கு மழை காரணமா? அல்லது நம் தரமற்ற சாலைகளும், முறையற்ற பராமரிப்பும் காரணமா?
தமிழகத்தில் 2021-22ல் சாலைகள் மற்றும் பாலங்கள் பராமரிப்புக்காக நாம் செலவழித்த தொகை ரூ 694.63 கோடி. 2022-23ல் ரூ765.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் மூலதனச் செலவுக்காக ரூ.17,421 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நம் தமிழகத்தில் சென்னையில் மட்டும் இல்லாமல், பெருநகரங்கள், கிராமங்களில் போடப்படும் சாலைகளின் தரம், இரண்டு முறை கடுமையான மழை பெய்தாலே ஆங்காங்கே குண்டும், குழியும் ஏற்படும் நிலையில் தான் உள்ளன.
நம் குடிமுறைப் பொறியியல் (Civil Engineering) பாடப் புத்தகங்களில் மழைப்பொழிவு ஏற்படும்போது மழை நீர் எங்கும் தேங்காத வகையில் சாலைகளில் ஒரு சிறிய அளவு சரிவினை ஏற்படுத்தி, சாலையின் இரு புறங்களில் நீர் சென்று சேரும் வகையில் கட்டமைக்கப்படவேண்டும் என்று தெளிவான வழிமுறைகளைத் தந்துள்ளனர். அதுபோல் சாலையின் இரு புறமும், கழிவு நீர் மற்றும் மழைநீர் செல்ல ஏதுவான பாதைகள் அமைக்க வேண்டும்.
சரியான வடிகால் அமைப்பு (Drainage System) சரியான சாலைகள் அமைப்பு மூலம் இரண்டு மூன்று நாட்கள் கடும் மழை பெய்தாலும் சாலைகளில் ஒரு சொட்டு நீர் கூட தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள முடியும்.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக மழைப்பொழிவு இருந்தாலும் அந்நாட்டின் சாலைகளும், வடிகால் அமைப்பும் மிகவும் தரமானதாக உள்ளதை நாம் பார்க்க முடியும். நம் நாட்டில் மக்கள் தொகையும், வாகனப்பயன்பாடும் ஒரு காரணமாக இருந்தாலும் அதற்கு தகுந்தவாறு நாம், நம் சாலைகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.
மழை நீர் சாலைகளில் தேங்கும் போது, நல்ல நீரில் மட்டுமே பரவக் கூடிய டெங்கு போன்ற பல கொசுக்கள் மூலம் பரவும் நோய்களும் பரவுகின்றன. இதனால் மக்களுக்கு உடல் நலச் சுமையோடு, நேரச் சுமை, பொருளாதாரச் சுமை ஏற்படுகிறது.
இன்னும் எத்தனை காலம், நாம் இதே நிலையில் தொடர முடியும்? இந்த நிலையைச் சரி செய்ய நம் அரசு தொலை நோக்குப் பார்வையோடு சிந்திப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு செயல் வடிவம் கொடுத்து, வெளிப்படைத் தன்மையோடு செயல்படுத்தி பணத்தைப் பார்த்துப் பார்த்து செலவு செய்து தமிழக சாலைகளின் தரத்தையும், வடிகால் அமைப்பின் தரத்தையும் மேம்படுத்துவது அவசியம்.
தரமான சாலைகள்
வளமான தமிழகம்
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்