காசா பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையான ரத்தப் போர் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல் உலகப் போருக்குப் பின் 1920 களில் பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் பாலஸ்தீனம் வந்தது. இதில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையராக இருக்க ஹிட்லரின் ஆட்சியிலிருந்து தப்பி புலம் பெயர்ந்தவர்களாக யூதர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வந்தனர்.
நாளடைவில் பாலஸ்தீனத்திலிருந்து யூதர்களுக்குத் தனிநாடு வேண்டும் என்று பிரிட்டனிடம் யூதக் குழுக்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1948ஆம் ஆண்டு மே – 14 ம் தேதி இஸ்ரேல் என்ற நாடு உருவானது. யூத, அரபுப்பகுதி என பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டது. காலப்போக்கில் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் ஆனது. இதனை பாலத்தீனம் ஏற்கவில்லை.
காசா என்பது பாலஸ்தீனத்தில் தன்னாட்சி பெற்ற ஒரு பகுதி. ஹமாஸ் என்னும் அமைப்பினரால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலுக்கு எதிராக காசா பகுதியிலிருந்துத் தாக்குதல் மற்றும் படையெடுப்பை ஹமாஸ் தொடங்கியது. இஸ்ரேலும் பதில் தாக்குதல் தொடங்கியது.
தற்போது நடக்கும் இப்போரில் இதுவரை 8000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனார். இதில் 2000 க்கும் மேல் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.
நம் வீட்டின் நிலப்பரப்பில் பக்கத்து வீட்டுக்காரர் எல்லைச்சுவர் எழுப்பினாலோ, நாம் வாங்கிய இடத்தை ஒருவர் ஆக்கிரமித்தாலோ கோபம் வரத்தான் செய்யும்! அந்த நிலக்கோபம் சில நேரங்களில் நிலச் சண்டையாக மாறி உயிர் பறிப்புகளும் நடக்கும். இதை நாம் உள்ளூரில் பார்த்து இருப்போம்.
பல நூறு ஏக்கர் நிலம் வைத்திருப்போர், சில தலைமுறைகளுக்குப் பின் சிறுநிலம் கூட இல்லாமல் இருப்பதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
நாம் நம் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டையிட்டால் என்றும் பிரச்சனை தான். அதே நேரத்தில் நாம் நம் வீட்டிற்கு அருகில் இருப்பவர்களிடம் அன்பாக இருந்தால், நமக்கு மட்டும் இல்லாமல் நம் பிள்ளைகளுக்கும் அது சிறப்பானதாக இருக்கும். அதுபோல் நாம் அண்டை நாடுகளோடு நட்புறவோடு இருந்தால் தான் நம் நாடு வளர்ச்சி அடையும்.
தற்போது நடைபெறும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் ‘யார் வெற்றி பெற்றாலும் இன்னும் ஒரு 500 வருடங்களுக்குப் பின் இதே வெற்றி நிலைக்கும் என்று கூற இயலாது. உலகில் எது ஒன்றும் நிரந்தரம் இல்லை. போரினால் பயன் அடைவோர் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தான்.
நாமும் நமக்குப் பின் வரும் தலைமுறையினரும் ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ போர் வழி செய்யாது. இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடக்கும் பிரச்சனை நாளை நமக்கும் நிகழலாம்.
தற்போது நடந்து வரும் போரினைத் தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்து நாடுகளும் உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்